மாவட்ட செய்திகள்
மீண்டும் ‘லே-ஆப்’ அறிவிப்பு நூற்பாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மீண்டும் ‘லே-ஆப்’ அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருபுவனையில் நூற்பாலை ஊழியர்கள் நூற்பாலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருபுவனை,

திருபுவனையில் புதுச்சேரி அரசின் கூட்டுறவு துறைக்கு சொந்தமான ‘ஸ்பின்கோ’ நூற்பாலை உள்ளது. இந்த ஆலையில் சுமார் 600 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சமீபகாலமாக அந்த நூற்பாலை லாபத்தில் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக ஆலை நிதி பற்றாக்குறையில் சிக்கி தவித்தது.

அதைத் தொடர்ந்து ஆலைக்கு கடந்த 1-ந் தேதி வரை ‘லே-ஆப்’ அறிவித்தனர். இந்தநிலையில் தற்போது நாளை (சனிக்கிழமை) வரை லே-ஆப் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்பாலை முன்பு திரண்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் தரப்பில் கூறும்போது, ‘நிதிப் பற்றாக்குறை என காரணம் காட்டி ஆலை நிர்வாகத்தினர் வேண்டுமென்றே ‘லே-ஆப்’ அறிவிக்கிறார்கள். இதன் மூலம் நூற்பாலையை தனியாரிடம் கொடுக்க முயற்சிகள் நடக்கின்றன. அதை எதிர்த்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனர். முன்னதாக நூற்பாலை முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் அமரநாதன், லெட்சுமணன், தட்சிணாமூர்த்தி, செல்வராஜ், ஞானப்பிரகாசம், தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.