மாவட்ட செய்திகள்
‘அம்மா மெஸ்’ உரிமையாளர் இல்ல திருமண விழா வைரமுத்து, பாரதிராஜா வாழ்த்து

மதுரை அம்மா மெஸ் உரிமையாளர் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மதுரை, 


மதுரை அம்மா மெஸ் உரிமையாளர்கள் செந்தில்வேல்-சுமதி. இவர்களுடைய மகன் முத்துமாணிக்கம் என்ற பிரபு. இவருக்கும் பவித்ரா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இவர்களது திருமணம் மதுரை சொக்கிகுளம் சாலையில் உள்ள பி.டி.ராஜன் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. திருமணத்திற்கு இயக்குனர் பாரதிராஜா முன்னிலை வகித்தார். கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார்.
இதில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், நடிகர் பாண்டியராஜன், முன்னாள் நீதிபதி பாட்ஷா, முன்னாள் டெல்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், நடிகர் வையாபுரி உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, மதுரைக்கு மீனாட்சி அம்மன் கோவில் போன்று பல அடையாளங்கள் இருக்கின்றன. தற்போது மதுரையின் மற்றொரு அடையாளமாக அம்மா மெஸ் இருக்கிறது. தமிழ்நாட்டின் உணவு பழக்கம் மாறி வருகிறது. பீட்சா, சைனீஸ் உணவு பொருட்களை தற்போதைய இளம் சமூகத்தினர் விரும்பி சாப்பிடுகின்றனர். நாம் எப்போதும் நமது பாரம்பரிய உணவை மறந்து விடக்கூடாது. பாரம்பரியம், பண்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்றார்.