மாவட்ட செய்திகள்
மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி வழங்கக்கோரி மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த நெய்தவாயல் ஊராட்சியில் உள்ளது மவுத்தம்பேடு கிராமம். இங்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் படி வேலை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வேலை வழங்கப்பட வில்லை. இதை கண்டித்து பொதுமக்கள் தங்களுக்கு பணி வழங்கக்கோரி வக்கீல் ராஜா தலைமையில் மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரபாபு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில்:-

ரூ.15 லட்சம் செலவில் நெய்தவாயல் ஊராட்சி முழுவதும் 4 பணிகள் நடந்து வருகிறது. வருகிற புதன்கிழமை முதல் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும். இவ்வாறு இவர் கூறினார்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.