மாவட்ட செய்திகள்
விவசாய சங்கத்தினர் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம்

திருமானூர் அருகே ஏரியை தூர்வாரக்கோரி விவசாய சங்கத்தினர் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருமானூர், 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கீழக்காவட்டாங்குறிச்சியில் உள்ள பெரிய ஏரி பல வருடங்களாக தூர்வாரப்படாததால் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. மேலும், ஏரியின் கரைகளில் உள்ள கருங்கல் சுவர் மற்றும் படிக்கட்டுகள் இடிந்து காணப்படுகின்றன. இதனை சரிசெய்யக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் மோசமான நிலையில் உள்ள இந்த ஏரியை தூர்வாரி கரைகளை சரி செய்யக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏரியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் மணியன் தலைமை தாங்கினார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆண்டவர், மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முக சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏரியை சுத்தம் செய்ய கோரி கோஷமிட்டனர்.

அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா, கிராமநிர்வாக அதிகாரி அறிவழகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடனடியாக ஏரியில் உள்ள முட்புதர்கள், பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு, கரைகள் சரி செய்யப்படும் என கூறினர். இதனையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.