மாவட்ட செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் மலேசியா, துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.14 லட்சம் தங்கம் சிக்கியது

மலேசியா, துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த சாகீப் அகமது (வயது 36) என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் அவரது சூட்கேசில் மின்சார வயர் இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த வயரை சோதனை செய்தபோது, அதில் செம்பு கம்பிகளுக்கு பதிலாக தங்க கம்பிகளை மறைத்து வைத்து நூதன முறையில் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 155 கிராம் தங்க கம்பிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

அதே போல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த காளிதாஸ் (39) என்பவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து சாகீப் அகமது, காளிதாஸ் இருவரும் யாருக்கு இந்த தங்கத்தை மலேசியா மற்றும் துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்?. இந்த கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.