மாவட்ட செய்திகள்
விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்கள் கலெக்டர் ராஜாமணி அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்களை கலெக்டர் ராஜாமணி அறிவித்துள்ளார்.
திருச்சி, 


விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்கள் குறித்து கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தியின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்து கரைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் சமீபத்தில் ரசாயன வண்ண பூச்சுகளுடன் கூடிய சிலைகளை வழிபட்டு நீர் நிலைகளில் கரைக்கும் பழக்கம் பரவி வருகிறது. இதனால் நீர் நிலைகள் மாசுபடும். ரசாயனம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் மாசுகட்டுப்பாடு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட இடங்களான திருச்சி மேலசிந்தாமணியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆறு, சோமரசம்பேட்டையில் உள்ள உய்யகொண்டான் வாய்க்கால், மண்ணச்சநல்லூரில் உள்ள பெருவள வாய்க்கால், ராம்ஜிநகரில் உள்ள கட்டளை வாய்க்கால் ஆகிய இடங்களில் கரைக்கலாம்.

இதேபோல லால்குடியில் அய்யன் வாய்க்கால், திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி பகுதியில் உள்ளவர்கள் வேங்கூர் காவிரி ஆறு, நவல்பட்டு, சிறுகனூர், சமயபுரம், முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர், தா.பேட்டை ஆகிய பகுதிகளில் செல்லும் காவிரி ஆறு, உப்பிலியபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் புளியஞ்சோலை வாய்க்கால், காவிரி ஆறு, மணப்பாறையில் மாமுண்டி ஆறு, வையம்பட்டியில் பொன்னணி ஆறு, துவரங்குறிச்சியில் பூதநாயகி அம்மன் கோவில் குளம் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.