மாவட்ட செய்திகள்
2-ம் நிலை போலீஸ்காரர் பணிக்கு 387 பேர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2-ம் நிலை போலீசாருக்கான (போலீஸ், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை) காலி பணியிடங் களுக்கான எழுத்துதேர்வு கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது.
தஞ்சாவூர்,

தஞ்சையில் 3 இடங்களில் இந்த தேர்வை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 816 பேர் எழுதினர். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. இதில் 827 ஆண்களும், 377 பெண்களும் பங்கேற்றனர்.

இவர்களுக்கு உடல்எடை, உயரம், மார்பளவு ஆகியவை சரிபார்க்கப்பட்டதுடன், ஓட்டம், கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற போட்டிகளும் நடத்தப் பட்டன. இவற்றில் தேர்வு செய்யப்பட்ட 361 ஆண்களும், 31 பெண்களும் சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு அழைக்கப்பட்டனர்.

அதன்படி சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று நடந்தது. இதில் 5 பேர் வரவில்லை. மீதமுள்ள 387 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப் பட்டது. இவர்கள் அனை வரும் தேர்ச்சி பெற்றனர். இப்பணி தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த பணியில் 250 போலீசார் ஈடுபட்டனர்.

தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 387 பேரின் பட்டியல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்படுவதுடன், மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.