மாவட்ட செய்திகள்
அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் - மாணவ, மாணவிகள் போராட்டம்

கிருஷ்ணகிரி அருகே பாடம் நடத்தாமல் இருந்த அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதை திரும்ப பெற வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 160 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 50). இவர் பள்ளிக்கு சரியாக வராமலும், வந்தாலும் பாடம் நடத்தாமல் இருந்ததாகவும், அவர் நடத்தி வரும் தனியார் பள்ளிகளின் பணியை மட்டும் கவனித்து வருகிறார் என்றும், மேலும், தனக்கு பதிலாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 2 ஆசிரியர்களை நியமனம் செய்து, அவர்கள் மூலம் பாடத்தை நடத்தி வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு புகார் வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் ராஜாவிற்கு, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதையடுத்து கும்மனூர் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி, அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து ஆசிரியர் ஜெயபிரகாசை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் 130-க்கும் மேற்பட்டவர்கள், பள்ளி வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் ஜெயபிரகாசின் பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வெயிலில் முட்டி போட்டு கொண்டு மாணவ, மாணவிகள் கோஷங்கள் எழுப்பினார்கள். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி தாசில்தார் சேகர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் மாணவ, மாணவிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து 2 மணி நேரம் நீடித்த போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறுகையில், ஆசிரியர் ஜெயபிரகாஷ் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.