மாவட்ட செய்திகள்
தன்னார்வ தொண்டு அமைப்புகள் தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்

தன்னார்வ தொண்டு அமைப்புகள் தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2018-2019-ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான இளைஞர் விழாவில், மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு தேசிய இளைஞர் விருது வழங்கப்பட உள்ளது.

2016-2017-ம் ஆண்டு காலத்தில் செய்த இளைஞர் நலப் பணிகளுக்காக இவ்விருதுகள் நடப்பு நிதியாண்டில் வழங்கப்பட உள்ளது. தனிநபர் பிரிவில் இந்த விருதை பெற 15 வயது முதல் 29 வயது வரை பூர்த்தியாகி இருக்க வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள், பள்ளிகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

இதேபோல் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பதிவுத்துறை சட்டத்தின்படி கடந்த மூன்றாண்டுகளுக்கு அமைப்பு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். சமூக நலன் சார்ந்த திட்டங்களை அறிவார்ந்த தன்மையுடன் மேம்படுத்த, தன்னார்வத்துடன் ஈடுபடும் தகுதியை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

எந்தவித லாப நோக்கத்துடனும் தொண்டு பணிகள் ஆற்றியிருக்க கூடாது. குறிப்பிட்ட சாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது இளைஞர்களை சமுதாய பணிகளில் ஈடுபடும் வகையில், சிறப்பான சேவை ஆற்றி இருக்க வேண்டும்.

எனவே 2016-2017-ம் ஆண்டு சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இந்த விருதுக்கு வருகிற 15-ந் தேதிக்குள் https//in-n-ov-ate.my-g-ov.in/nya/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.