மாவட்ட செய்திகள்
செம்மண் கடத்திய 3 டெம்போ, பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்

கருங்கல், கொல்லங்கோடு பகுதியில் செம்மண் கடத்திய 3 டெம்போ, 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கருங்கல்,

கருங்கல் அருகே ஆலஞ்சி பாரியக்கல் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 டெம்போக்களை நிறுத்தி சோதனையிட்ட போது, அவற்றில் செம்மண் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து 2 டெம்போக்களையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் செம்மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரமும் போலீசாரிடம் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட டெம்போக்கள், பொக்லைன் எந்திரம் கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கொல்லங்கோடு ஐத்திக்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் அள்ளி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, செம்மண் ஏற்றிய நிலையில் புறப்பட தயாராக நின்ற ஒரு டெம்போவையும், ஒரு பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் போதிய ஆவணங்கள் இன்றி செம்மண் அள்ளிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து டெம்போவையும், பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்து கொல்லங்கோடு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அவை பத்மநாபபுரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.