மாவட்ட செய்திகள்
கல்குவாரி குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

மாங்காடு அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
பூந்தமல்லி,

பூந்தமல்லி, கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட். இவரது மகன் கில்பர்ட்(வயது 17). பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது நண்பர் ரித்திக் (16). பூந்தமல்லி, கரையான்சாவடியை சேர்ந்தவர். விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இருவரும் மாங்காட்டில் உள்ள நண்பர் வீட்டில் படிக்க செல்வதாக கூறி விட்டு மோட்டார்சைக்கிளில் சென்றனர்.

இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் இருவரும் வீட்டுக்கு வர வில்லை. அவர்களின் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என்று வந்தது. அவரது நண்பரை தொடர்பு கொண்டு கேட்டபோது இருவரும் வரவில்லை என்று கூறி உள்ளார். இதையடுத்து மாங்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் ஒரு மோட்டார் சைக்கிள், உடைகள், பள்ளி புத்தகங்கள் இருப்பதாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் மற்றும் 2 பள்ளி மாணவர்களின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அங்கு இருப்பது தங்களது மகன்களின் பைகள் மற்றும் மோட்டார்சைக்கிள் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்குவாரி குட்டையில் தேடினார்கள்.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு நேற்று மாலை குவாரி குட்டையில் மூழ்கி இறந்த கில்பர்ட், ரித்திக் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இருவரும் நண்பர் வீட்டில் படிக்க போவதாக கூறி விட்டு கல்குவாரி குட்டையில் குளித்துள்ளனர். அப்போது குட்டையில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.