மாவட்ட செய்திகள்
வேலைநிறுத்தம் நீடிப்பு: ரிக் லாரி தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் தவிப்பு

ரிக் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நீடித்தது. இதனால் அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் வேலைஇழந்து தவித்து வருகின்றனர்.
நாமக்கல்,

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் தாலுகா ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.

இதற்கிடையே திருச்செங்கோடு ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் திருச்செங்கோடு, வேலகவுண்டம்பட்டி, கந்தம்பாளையம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரிக் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. ரிக் லாரி உரிமையாளர்களுக்கு தினசரி ரூ.1 கோடி வீதம் சுமார் ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த போராட்டம் குறித்து நாமக்கல் தாலுகா ரிக் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த போராட்டம் காரணமாக ரிக் லாரி டிரைவர்கள், கிளனர்கள், உதவியாளர்கள் என சுமார் 15 ஆயிரம் பேர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். எனவே அரசு எங்களின் கோரிக்கையை ஏற்று டீசல் விலையை குறைக்க வேண்டும்.

இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (இன்று) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. எங்களின் கோரிக்கையும் அதுவாக இருப்பதால், அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை நீடிக்க முடிவு செய்து உள்ளோம்.

நாளை (இன்று) மாலைக்கு பிறகு வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முடிவு செய்வோம். மேலும் எங்களின் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆழ்துளை கிணறு அமைக்க ஒரு அடிக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்த்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.