மாவட்ட செய்திகள்
விவசாயிகளுக்கு ரூ.5.19 கோடி மானியம் - கலெக்டர் ரோகிணி தகவல்

வேளாண் எந்திரங்களை வாங்க விவசாயிகளுக்கு ரூ.5.19 கோடி மானியத்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,

மானியத்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக கலெக்டர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண்மை பொறியியல் துறை மூலம், வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் இந்த நிதி ஆண்டில் (2018-19) மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் வாங்க சேலம் மாவட்டத்திற்கு ரூ.5.19 கோடி மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் டிராக்டர்கள், நெல்நடவு எந்திரம், கதிர் அறுக்கும் எந்திரம், சுழல் கலப்பை, விசைக்களையெடுப்பான், விதைக்கும் கருவி ஆகியவை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 முதல் 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற விவசாயிகள், உழவன் செயலியில் ஆதார் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும்.

கிராம அளவிலான வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் மூலம் பண்ணை சக்தி குறைவாக உள்ள கிராமங்களில், குறைந்தபட்சம் 8 உறுப்பினர்கள் கொண்ட விவசாயக் குழுக்கள் மொத்தம் ரூ.10 லட்சத்திற்கு குறையாத மதிப்புடைய பண்ணை எந்திரங்களை வாங்கி, வாடகை மையங்களை நடத்தலாம். நீடித்த நிலையான மானாவாரி இயக்க திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள குழுக்களும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சேலம், வாழப்பாடி, ஏற்காடு, வீரபாண்டி, பனமரத்துப்பட்டி வட்டார விவசாயிகள் சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தை தொடர் பு கொள்ளலாம். மேட்டூர், கொளத்தூர், தாரமங்கலம், நங்கவள்ளி, மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி வட்டார விவசாயிகள் மேட்டூர் குஞ்சாண்டியூரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள் ஆத்தூர் காந்தி நகரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.