மாவட்ட செய்திகள்
அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி பேராசிரியர் பலி

தஞ்சையில் அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி பேராசிரியர் பலியானார்.
தஞ்சாவூர்,

தஞ்சை கீழவண்டிக்காரதெருவில் உள்ள கருப்பாயி அம்பலக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் சிவசாமி. இவருடைய மகன் பிரபு(வயது41). இவர் தஞ்சையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை பிரபு தனது மோட்டார் சைக்கிளில் தனது சகோதரியும், கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலருமான யசோதாவை(62) ஏற்றிக் கொண்டு பள்ளியக்கிரகாரத்தில் உள்ள அவரது வீட்டில் விட சென்றார்.

கொடிமரத்துமூலையை கடந்து கரந்தை அரசு போக்குவரத்து கழக பணிமனை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பிரபு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், பிரபுவை முந்தி செல்ல முயன்றார். அப்போது அந்த மோட்டார் சைக்கிளானது, பிரபு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியது.

இதனால் நிலைதடுமாறிய பிரபு, எதிரே மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ்சின் பின்பகுதியில் மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். யசோதா லேசான காயம் அடைந்தார். அவர் தஞ்சையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தஞ்சை கிழக்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டு முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிரபு உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.