மாவட்ட செய்திகள்
வக்கீலை வழிமறித்து கத்தியை காட்டி நகை-பணம் பறிப்பு

உறவினருடன் காரில் வந்த வக்கீலை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்து சென்ற 16 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம்,


கடலூர் கே.என்.பேட்டையை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 46). வக்கீல். இவர் சம்பவத்தன்று இரவு தனது உறவினர் ஆனந்தி என்பவருடன் ஒரு காரில் பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு புறப்பட்டார். நெல்லிக்குப்பம் அடுத்த ஓட்டேரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் நின்ற 4 பேர் கொண்ட கும்பல், அசோக்குமார் ஓட்டி வந்த காரை திடீரென வழிமறித்து, அசோக்குமார், ஆனந்தி ஆகியோரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த நகை, கைக்கடிகாரம் மற்றும் ரூ.3 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை பறித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில் வக்கீலிடம் நகை, பணம் பறித்த 4 பேர் கொண்ட கும்பல் கடலூர் கடற்கரை சாலையில் சுற்றித்திரிவதாக நேற்று முன்தினம் மாலை நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கடலூருக்கு விரைந்து வந்து, அந்த 4 பேர் கொண்ட கும்பலை பிடித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் கடலூர் பில்லாலி தொட்டி தெருவை சேர்ந்த சூர்யா(22), கே.என்.பேட்டை ராஜேஷ் (22) சக்திஆகாஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் என்பதும், கடந்த 7-ந்தேதி உறவினருடன் காரில் வந்த வக்கீல் அசோக்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி நகை, பணம், கைக்கடிகாரத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.