மாவட்ட செய்திகள்
பொய்கை பள்ளி மாணவர் தற்கொலை வழக்கு: 5 ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றம்

பொய்கை அரசு பள்ளியில் படித்து வந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உறவினர்கள் ஆசிரியர்களை தாக்கியதால் தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர்.
வேலூர்,

வேலூரை அடுத்த பொய்கையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரின் மகன் அருண்பிரசாத் (வயது 17) 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் 3-ந்தேதி மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் புத்தகப் பையில் இருந்தது. அதில் 5 ஆசிரியர்கள் குறித்து மாணவர் எழுதியிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் 7-ந்தேதி காலை பள்ளிக்குச் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தாக்கியதில் ஆசிரியர் கண்ணப்பன் உள்பட 3 ஆசிரியர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து மாணவரின் உறவினர்கள் 5 பேர் மீது விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆசிரியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரியும் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் காலாண்டு தேர்வை புறக்கணிக்கப் போவதாக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் வேலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைபின் தொடர்பாளர் செ.நா.ஜனார்த்தனன், அமைப்பாளர்கள் எல்.மணி, ரா.புண்ணியகோட்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆசிரியர் சங்கம் அறிவித்த தேர்வு புறக்கணிப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேலும் பள்ளிக்கு ஒருவாரம் போலீஸ் பாதுகாப்பு வழங்க பரிந்துரை செய்திருப்பதாகவும், பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியர்கள் கண்ணப்பன், குமார், ரமேஷ், சிவராமன் ஆகிய 5 பேரும் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்தார்.