மாவட்ட செய்திகள்
இந்தி நடிகர் திலீப்குமாருக்கு நிமோனியா காய்ச்சல்

இந்தி நடிகர் திலீப்குமார் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரை டாக்டர்கள் அவசர பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மும்பை,

பழம்பெரும் இந்தி நடிகர் 95 வயது திலீப்குமார் கடந்த 5-ந் தேதி மதியம் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவர் மும்பை பாந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். இதில் திலீப்குமாருக்கு நெஞ்சில் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதற்காக மருத்துவ நிபுணர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில், திலீப்குமாருக்கு லேசான நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதை அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்தார். இதையடுத்து, டாக்டர்கள் திலீப்குமாரை அவசர பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி அந்த மருத்துவமனையின் துணை தலைவர் அஜய் குமார் பாண்டே கூறுகையில், ‘சிகிச்சைக்கு பின்னர் திலீப்குமாரின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் அவர் நலமுடன் இருக்கிறார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்’ என்றார்.