மாவட்ட செய்திகள்
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு மாரத்தான் போட்டி

பாளையங்கோட்டையில் எல்.ஐ.சி. சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.
நெல்லை, 


எல்.ஐ.சி. நெல்லை கோட்டம் சார்பில் எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. இந்த போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து தொடங்கியது. போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தனித்தனியான நடத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரமும், கல்லூரி மாணவர்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், பொதுமக்களுக்கு 7 கிலோ மீட்டர் தூரமும் போட்டி நடந்தது.

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நடந்த போட்டியை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு நடந்த போட்டியை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கண்ணன் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் சுமார் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் எல்.ஐ.சி. நெல்லை கோட்ட வணிக மேலாளர் வெங்கட கிருஷ்ணன் வரவேற்றார். நெல்லை கோட்ட முதுநிலை மேலாளர் வசந்தகுமார் வாழ்த்தி பேசினார். நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணாசிங் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். முடிவில் நெல்லை கோட்ட விற்பனை மேலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.