மாவட்ட செய்திகள்
திருச்சி அருகே, அந்தநல்லூரில் பழமை வாய்ந்த சிவன் கோவிலில் தீ விபத்து

திருச்சி அருகே அந்தநல்லூரில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் நெல்குடோன், ரிஷப வாகனம் எரிந்து நாசமாயின.
ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் அந்தநல்லூரில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்று கரையில் வடதீர்த்தநாதர் என்ற சிவன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்ததாகும். கருங்கற்களால் கட்டப்பட்ட இங்கு சிவன் சன்னதி, அம்மன் சன்னதி, முருகன் சன்னதி கொண்ட 3 கோபுரங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி கோவிலின் முன்பகுதியில் நவராத்திரி மண்டபம் உள்ளது.

பிரசித்தி பெற்ற இக்கோவிலில் பிரதோஷம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா சமயங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்து 8-வது ஆண்டு தொடங்கியுள்ளது. இங்கு தினமும் 4 கால பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் நேற்று மதியம் உச்சிகால பூஜை முடிவடைந்ததும் கோவில் கதவை பூட்டிவிட்டு குருக்கள் சென்று விட்டார்.

இதற்கிடையில் மதியம் கோவிலுக்குள் இருந்து குபு, குபு என புகை வந்தது. இதை அந்த வழியாக பஸ்சில் சென்ற பயணிகள் கவனித்து, சாலையோரத்தில் நின்ற பொதுமக்களிடம், கோவிலுக்குள் தீப்பிடித்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு, அருகே வீட்டில் உள்ள கோவில் குருக்களுக்கு தகவல் தெரிவித்து சாவியை வாங்கி கோவில் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது கோவிலின் முன்பகுதியில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

பின்னர், பொதுமக்கள் கோவிலுக்குள் இருந்த தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்து தீயை அணைக்க முயன்றனர். அப்போது, கருங்கல் தூண்கள் வெடித்து சிதறின. தொடர்ந்து தீ வேகமாக பரவியது. இதனால் பயந்து போன பொதுமக்கள் திருச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீயை பரவ விடாமல் தடுத்து அணைத்தனர்.

எனினும், இந்த தீ விபத்தில் கோவிலில் இருந்த மரத்தால் ஆன ரிஷப வாகனம் மற்றும் நெல் குடோன் கட்டிடமும் எரிந்து நாசமாயின. விவசாயிகள் காணிக்கையாக செலுத்திய நெல்மணிகள் அனைத்தும் தீயில் கருகின. இந்த தீ விபத்தால் கோவில் சுவற்றில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. தீயை அணைத்த பிறகும் கருங்கல் கட்டிடத்தில் இருந்து சிலமணிநேரம் புகை வந்து கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக கோவில் சன்னதிகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. நவராத்திரி மண்டபத்தில் உள்ள மின்சார வயரில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமாவாசை தினமான நேற்று கோவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்தது.