மாவட்ட செய்திகள்
குடிநீர் சீராக வினியோகிக்க கோரி கிராமமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் சீராக வினியோகிக்க கோரி கொல்லாபுரம் கிராமமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்,

அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொல்லாபுரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வராததை கண்டித்தும், குடிநீரை சீராக வினியோகிக்க கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கொல்லாபுரம் பெண்கள் உள்பட பொதுமக்கள் நேற்று மாலை கையில் காலிக்குடங்களுடன் அரியலூர்-செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணி வகுத்து நீண்ட வரிசையில் நின்றன. இது குறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் கிராமத்திற்கு குடிநீர் வரும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வரவில்லை என்றும், அதனை சீரமைக்க வரை தற்காலிகமாக தற்போது குடிநீர் வழங்கப்படும் என்றும், பின்னர் குழாயில் உள்ள அடைப்பை எடுத்த பிறகு குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதனை தொடர்ந்து அந்தப்பகுதிக்கு உடனடியாக தற்காலிகமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி கொல்லாபுரம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.