மாவட்ட செய்திகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் செய்வதற்கான சிறப்பு முகாம் 652 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.
பெரம்பலூர்,

இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2019 அன்று தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் கடந்த 1-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இரூர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கலெக்டர் சாந்தா கூறியதாவது:-

18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக இன்று (அதாவது நேற்று) வருகிற 23-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 7, 14-ந்தேதி ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

அதனடிப்படையில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளிலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களிலும் என மொத்தம் 652 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்களை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6-ம், பெயர் நீக்கலுக்கு படிவம் 7-ம், திருத்தம் மேற்கொள்வதற்கு படிவம் 8-ம், முகவரி மாற்றம் (ஒரே சட்டமன்ற தொகுதிக்குள்) படிவம் 8 ஏ-ம் பொதுமக்களால் உரிய ஆவணங்களுடன் அளிக்கப்பட்டு வருகின்றது. இது போன்ற சிறப்பு முகாம்களிலும், ஏனைய நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அலுவலக வேலை நேரங்களிலும் பொதுமக்கள் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஆலத்தூர் தாசில்தார் ஷாஜஹான் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.