மாவட்ட செய்திகள்
ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திராவிடர் தமிழர் கட்சியினர் மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்து கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டரிடம் திராவிடர் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.
கோவை, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடை பெற்றது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் வீட்டுமனை பட்டா, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் உத்தரவிட்டார்.தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் ஆட்டோ டிரைவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–கோவை சித்ரா, காளப்பட்டி மற்றும் சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக 100–க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை குறைந்த வாடகையில் இயக்கி எங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறோம். பொதுமக்கள் கூடும் பகுதியில் குறிப்பிட்ட ஆட்டோக்களை நிறுத்த போலீசாரின் அனுமதியுடன் தொழிற்சங்கம் மூலம் கோவையில் அனைத்து ஆட்டோ நிறுத்தும் இடமும் செயல்பட்டு வருகின்றது. இந்தநிலையில் மேற்கண்ட பகுதிகளில் ஆட்டோ நிறுத்தும் இடங்களில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். எனவே கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுத்து ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.திராவிடர் தமிழர் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வீரமுத்து தலைமையில் நிர்வாகிகள் கழுத்தில் தூக்குகயிறு போன்று அணிந்து வந்து மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:–முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று கைதிகளாக கடந்த 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு ஒரு முடிவை எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.இதனை தொடர்ந்து தமிழக அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு, சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவர்னர் கருணை கொண்டு அரசின் தீர்மானத்தை பரிசீலனை செய்து 7 பேரையும் விடுதலை செய்து அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழும் நிலையை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.தி.மு.க. குறிச்சி பகுதி செயலாளர் குறிச்சி பிரபாகரன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறிஇருப்பதாவது:–கோவை குறிச்சி பகுதி 97–வது வார்டுக்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தை அடுத்த நாகராஜபுரத்தில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் இந்த பகுதியில் 10 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டு மனை பட்டாவும், மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்தநிலையில் கடந்த வாரம் குடிசை மாற்று அதிகாரி ஒருவர் வந்து திடீரென வீடுகளை காலிசெய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டினார். ஏழ்மை நிலையில் உள்ள எங்களால் இந்த இடத்தை விட்டு வீடுகளை காலி செய்து பிற இடங்களுக்கு செல்ல இயலாது. எனவே எங்கள் வீடுகளை காலி செய்ய வலியுறுத்தக்கூடாது. மேலும் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.அமுதசுரபி திருநங்கைகள் நலச்சங்க செயலாளர் ஜானகி தலைமையில் திருநங்கைகள் அளித்த மனுவில், சென்னையில் திருநங்கைகளுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் எங்களுக்கும் கோவையில் வீடு கட்டித்தரவேண்டும் என்று பல முறை மனு அளித்தோம். ஆனால் அதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு வீடுகட்டிக்கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இருகூர் கிளை சார்பில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மவுனசாமி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், இருகூர் பேரூராட்சி பகுதியில் ரெயில்வே சுரங்க பாதை அமைப்பதற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.