மாவட்ட செய்திகள்
ஓட்டேரியில் அக்கா–தம்பியை கல்லால் தாக்கிய வாலிபர் கைது

ஓட்டேரியில் அக்கா–தம்பியை கல்லால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி சேமாத்தம் நியூ காலனியை சேர்ந்தவர் நவீன்(வயது 22). இவருக்கும் ஐ.சி.எப் பகுதியை சேர்ந்த ஆரி என்ற அர்ஜுன்(19) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆரி, தனது நண்பர்களான லாரன்ஸ், கருப்பு இமான் மற்றும் ஜெகன் ஆகியோருடன் சேர்ந்து நவீனை கொலை செய்யும் நோக்கில் ஓட்டேரி வந்தார். 

நவீன் வீட்டுக்கு சென்ற அவர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே அவர் இருக்கிறாரா? என பார்த்தனர். அப்போது நவீன் வீட்டில் இல்லாததால் பக்கத்து வீட்டின் ஓடுகள் மீது தாவி தப்பி செல்ல முயன்றனர். 

அக்கா–தம்பி

திடீரென வீட்டின் மீது மர்மநபர்கள் இருப்பதுபோல் சத்தம் வந்ததால் அந்த வீட்டில் இருந்த திரிபுரசுந்தரி (40) மற்றும் அவரது தம்பி ராஜேந்திரன் (37) ஆகியோர் வெளியே வந்து பார்த்தனர். 

அப்போது ஆரி உள்பட 4 பேரும் திரிபுரசுந்தரி மற்றும் ராஜேந்திரன் மீது கற்களை வீசி பலமாக தாக்கி உள்ளனர். இதில் இருவருக்கும் தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து திரிபுரசுந்தரி ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார். 

ஒருவர் கைது 

அதன்பேரில் 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஆரி, ராஜீவ் காந்திநகர் மற்றும் சேமாத்தம் காலனி சந்திப்பு அருகே உள்ள கால்வாய் அடியில் அமர்ந்து கஞ்சா புகைப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. 

இதையடுத்து இன்ஸ்பெக்டர் முகம்மது நாசர், தலைமை காவலர்கள் மலைவேல் மற்றும் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆரியை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.