மாவட்ட செய்திகள்
சோழிங்கநல்லூர் கல்லூரியில் ‘கேட்டரிங்’ படிப்பில் சேர நண்பருக்காக தேர்வு எழுதிய வடமாநில வாலிபர் கைது

சோழிங்கநல்லூரில் உள்ள கல்லூரியில் நடந்த மத்திய அரசின் ‘கேட்டரிங்’ பிரிவுக்கான தேர்வில், நண்பருக்காக தேர்வு எழுதிய வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் மத்திய அரசின் ‘கேட்டரிங்’ பிரிவுக்கான தேர்வு நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 17 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். 

அப்போது தேர்வறையில் அரியானாவைச் சேர்ந்த மனீஷ் (வயது 20) என்பவர் செல்போனை பயன்படுத்தினார். கல்லூரி மேற்பார்வையாளர் மனீஷை விசாரித்தபோது, அவர் பதட்டத்துடன் நேர்மாறாக பதில் கூறினார். அவருடைய செல்போனை சோதித்தபோது, கேள்விகளை எஸ்.எம்.எஸ். மூலமாக வேறு ஒரு நபருக்கு அனுப்பி பதில் கேட்டது தெரிய வந்தது.

ஆள் மாறாட்டம்

இதனால் சந்தேகம் அடைந்த கல்லூரி நிர்வாகம், இதுபற்றி செம்மெஞ்சேரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக தேர்வு நடந்த பகுதிக்கு வந்த போலீசார், அந்த வாலிபரிடம் விசாரணை செய்தனர். 

அதில் அவரது பெயர் அஜய்(24) என்பதும், அரியனாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தனது நண்பர் மனீஷுக்கு பதிலாக தான் தேர்வு எழுத வந்ததாகவும், மனீஷ் அவர் தங்கும் இடத்தில் இருந்து செல்போன் மூலம் கேள்விக்கான பதிலை அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

கைது

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆள்மாறாட்டம் செய்த அஜயை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

மனீஷ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.