மாவட்ட செய்திகள்
கோவிலில் திருவிழா நடத்த அனுமதி கேட்டு பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கோவிலில் திருவிழா நடத்த அனுமதி கேட்டு பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 262 மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக வழங்கினர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

அழகாபுரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் ஊரிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் நடத்துவது வழக்கம். கடந்தாண்டு திருவிழா நடைபெற்று கொண்டிருந்த போது எங்களது சமூகத்துக்கும், வேறு ஒரு சமூகத்துக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் திருவிழா நிறுத்தப்பட்டது.

இது சம்பந்தமாக காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலம் சமரசம் செய்யப்பட்டு 3 நாட்கள் மட்டும் திருவிழா நடத்த அனுமதி அளித்தனர். இதனை ஏற்க மறுத்த நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 10 நாட்கள் திருவிழா நடத்தவும், அந்த சமூகத்தின் தெரு வழியாக கரகம் கொண்டு செல்லவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன் நகல் உடையார்பாளையம் கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே இந்தாண்டு பாதுகாப்புடன் திருவிழா நடத்த கலெக்டர் அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) பூங்கோதை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.