மாவட்ட செய்திகள்
மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் மறியல்-ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேனி மாவட்டத்தில் 15 இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இது தொடர்பாக 601 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி,


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு தழுவிய அளவில் நேற்று போராட்டம் நடந்தது. தமிழகத்தில் முழு அடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து இருந்தன.

அதன்படி தேனி மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
மாவட்டத்தில் மொத்தம் 15 இடங்களில் போராட்டம் நடந்தது. இதில் 12 இடங்களில் சாலை மறியலும், 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
தேனியில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சார்பில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேரு சிலை சிக்னலை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், ஊர்வலம் செல்ல முயன்றவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் தி.மு.க.வினர் கம்பம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் மற்றும் ம.தி.மு.க., அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மொத்தம் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.

போடி தேவர் சிலை முன்பு மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 18 பேர், ஆட்டோ டிரைவர்கள் 55 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 39 பேர் கைது செய்யப்பட்டனர். போடி அருகே சிலமலையில் சாலை மறியல் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

சின்னமனூரில் மார்க்கையன்கோட்டை சந்திப்பில் மறியல் செய்த 20 பேரும், ஆண்டிப்பட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை முன்பு மறியல் செய்த 58 பேரும் கைது செய்யப்பட்டனர். கடமலைக்குண்டு தபால் நிலையம் முன்பு சாலை மறியல் செய்த 55 பேரும், கம்பம் தபால் நிலையம் முன்பு மறியல் செய்த 90 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பெரியகுளம் தென்கரை மூன்றாந்தலில் மறியல் செய்த தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் மூக்கையா உள்பட 58 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மூன்றாந்தலில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 35 பேரும் கைதாகினர். கோம்பையில் மறியல் செய்த 58 பேர் கைது செய்யப்பட்டனர்.

கம்பம் காந்தி சிலை அருகே தி.மு.க. நகர பொறுப்பாளர் துரை நெப்போலியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கம்பம் போக்குவரத்து சிக்னலில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் நாகராஜ் தலைமையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 95 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மொத்தம் 601 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 41 பேர் பெண்கள் ஆவார்கள்.
அதேபோல், கடமலைக்குண்டுவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்தமபாளையம் பஸ் நிலையம் அருகிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலையை குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

தேனி பஸ்நிலையம் உள்பட மாவட்டத்தின் பிற இடங்களில் உள்ள பஸ்நிலையங்களில் இருந்து வழக்கம் போல அரசு, தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கின. அனைத்து கடைகளும் திறந்திருந்தன. ஆனால் 25 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை.