மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகேஏரியில் மூழ்கி பிளஸ்–1 மாணவர்கள் 2 பேர் சாவு

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் மூழ்கி பிளஸ்–1 மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். உடல்களை மீட்க தாமதமானதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மகன் மோகேஷ்வரன்(வயது 16). இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ஜெகத்செல்வன்(16).

நண்பர்களான மோகேஷ்வரன், ஜெகத்செல்வன் இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தனர். விடுமுறை நாளான நேற்று முன்தினம் நண்பர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பீமந்தாங்கள் பகுதியில் உள்ள தங்கள் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடசென்றனர். 

ஏரியில் மூழ்கி சாவு

மாணவர்கள் இருவரும் விளையாடிவிட்டு அங்கு இருந்த ஏரியில் குளித்தனர். அப்போது ஜெகத்செல்வனும், மோகேஷ்வரனும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சகநண்பர்கள், அருகில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

உடனடியாக அவர்கள், ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக் கும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏரியில் மூழ்கிய மாணவர்களின் உடல் களை தேடினர். ஆனால் அதற்குள் இருட்டிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. 

உறவினர்கள் வாக்குவாதம்

இதையடுத்து நேற்று காலை இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் மீண்டும் ஏரியில் இறங்கி மாணவர்களை தேடினர். பல மணி நேரம் தேடியும் மாணவர்களின் உடல்களை கண்டறிய முடியவில்லை. போதிய உபகரணங் கள் இல்லாமல் தேடியதால் மாணவர்களின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. 

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் உறவினர்கள் போலீசாரிடமும், தீயணைப்புத்துறையினரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபடமுயற்சி செய்தனர். 

உடல்கள் மீட்பு

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணா, ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை சமாதானப்படுத்தினர். மாணவர்களின் உடல்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அரக்கோணத்தில் இருந்து வர இருப்பதாக தெரிவித்தனர். 

இதற்கிடையில் ஏரியில் மூழ்கி பலியான மோகேஷ்வரனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஏரியில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, மற்றொரு மாணவர் ஜெகத்செல்வனின் உடலை மீட்டனர்.

பின்னர் 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.