மாவட்ட செய்திகள்
சென்னை விமான நிலையத்தில்துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9½ லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.9½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,

பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு தங்கம் கடத்தப்படுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்த தங்கத்தை விமான நிலையத்திலேயே பறிமுதல் செய்யும் அதிகாரிகள், அவற்றை கடத்தி வரும் நபர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் நேற்று அதிகாலையில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

சென்னையை சேர்ந்தவர்

அப்போது துபாயில் இருந்து இலங்கை வழியாக ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சென்னையை சேர்ந்த ஜானகிராமன் (வயது 47) என்பவரின் உடைமைகளை சோதனையிட்ட போது அவரது பெட்டியில் தங்கச்சங்கிலி மற்றும் தங்க துண்டுகள் மறைத்து வைத்திருந்தை கண்டுபிடித்தனர்.

மொத்தம் ரூ.5½ லட்சம் மதிப்புள்ள 170 கிராம் தங்கம் இருந்தது. துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மற்றொரு சம்பவம்

இதைப்போல துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சோதனையிட்ட போது, ஆந்திராவை சேர்ந்த ரங்கநாதன் (42) என்பவரின் பெட்டியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 125 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. அதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9½ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.