மாவட்ட செய்திகள்
தற்கொலை செய்த பெண் போலீஸ் ஏட்டு எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது

தனது சாவுக்கு காரணம் யார்? என்று தற்கொலை செய்த பெண் போலீஸ் ஏட்டு எழுதிய பரபரப்பு கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
சூரமங்கலம்,

சேலம் சூரமங்கலம் புதுரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் கவுதமன். இவருடைய மனைவி புவனேஸ்வரி(வயது 33). ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். திருமணமாகி ஒரு ஆண்டு மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் குடும்ப பிரச்சினை காரணமாக அவர்கள் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

புவனேஸ்வரி சேலம் போடிநாயக்கன்பட்டி அண்ணா நகர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கவுதமன் விவாகரத்து கேட்டு சேலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதற்கிடையில் கணவருடன் சேர்ந்து வாழ புவனேஸ்வரி ஆசைப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சம்பவத்தன்று அவர், கவுதமனை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை திட்டி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்தநிலையில் புவனேஸ்வரி எழுதி வைத்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கி உள்ளது. அதில், ‘கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன். இதற்காக அவரை தேடி சென்றேன். ஆனால் என்னை திட்டி அனுப்பி விட்டனர். தனது சாவுக்கு கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் தான் காரணம்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கடிதம் புவனேஸ்வரி எழுதியது தானா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான கவுதமனை போலீசார் தேடி வருகின்றனர்.