மாவட்ட செய்திகள்
கடலூரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் அதிரடி சோதனை: 140 பவுன் நகை, ரூ.33½ லட்சம் பறிமுதல்

கடலூரில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் 140 பவுன் நகை, ரூ.33½ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கள்ளக்குறிச்சி, 


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு உள்பட 2 பேரை விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள சொந்த வீட்டில் பாபு குடும்பத்துடன் வசித்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரை தொடர்பு கொண்டு, பாபுவின் வீட்டில் சோதனை நடத்த அறிவுறுத்தினர். அதன்பேரில், மதியம் 1 மணிக்கு கடலூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சதீஷ் மற்றும் போலீசார் அதிரடியாக பாபுவின் வீட்டுக்கு சென்று சோதனையை தொடங்கினர்.

அப்போது வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினரை வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அவர்களது முன்னிலையில் சோதனை நடைபெற்றது. இரவு 9.45 மணிக்கு சோதனையை முடித்து விட்டு போலீசார் வெளியே வந்தனர். அப்போது அவர்கள் ஒரு சூட்கேஸ், 2 பை களில் பாபு வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர்.அதில், 140 பவுன் நகை, 15 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.33½ லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டு கொண்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக பாபு வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்காக எந்திரம் கொண்டு வரப்பட்டது. அந்த எந்திரம் மூலம் பணம் எண்ணும் பணி நடந்தது. மேலும் கைப்பற்றப்பட்ட நகைகளின் உறுதி தன்மையை அறியும் வகையில் நகை மதிப்பீட்டாளர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நகைகளை சோதனை செய்து, அவற்றை மதிப்பீடு செய்து போலீசாரிடம் தெரிவித்தனர்.

பாபுவுக்கு வங்கிகளில் 6 பெட்டகங்கள் இருப்பதும், அதில் 300 பவுன் நகைகள் இருக்கும் என்றும், பாபுவின் பெயரில் 40-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருப்பதும், அதில் அவர் ரூ.60 லட்சம் வைத்திருப்பதும், இது தவிர கடலூர், சென்னையில் அவருக்கு பல கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதும் அம்பலமாகி உள்ளது.

மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வரும் பாபு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சேர்த்தது எப்படி? என்பது குறித்து அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணத்தை கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இரவோடு இரவாக ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.