மாவட்ட செய்திகள்
மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றவாலிபரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற வாலிபரை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருமழிசையை சேர்ந்தவர் வினோத் (வயது 27). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் பிரயாம்பட்டு ஜவகர் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அங்கிருந்த கோபிநாத், நந்தகுமார், மனோ, கண்ணன், சந்துரு, சரவணன் ஆகியோர் ஏன் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்கிறாய்? என கூறி தகாத வார்த்தையால் பேசி தாங்கள் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் தாக்கினார்கள்.

இதில் காயம் அடைந்த வினோத் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வினோத் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வினோத்தை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவில் பூசாரி

திருவள்ளூரை அடுத்த திருமழிசையை சேர்ந்தவர் நாகராஜ் (41). இவர் அந்த பகுதியில் உள்ள இளங்காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகராஜன் வேலையின் காரணமாக கோவிலில் பூஜையை முடித்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த பார்த்திபன், விக்கி, நரேஷ், வெங்கடேசன், ரமேஷ் ஆகியோர் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி கையாலும் உருட்டுக்கட்டையாலும் தாக்கிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாகராஜ் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் நாகராஜை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.