மாவட்ட செய்திகள்
பொன்னேரியில்ஆரணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம்; கலெக்டர் ஆய்வு

பொன்னேரியில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பொன்னேரி, 

பொன்னேரி பேரூராட்சி பகுதியில் அடங்கியது குன்னமஞ்சேரி கிராமம். இந்த கிராமம் ஆரணி ஆற்றில் மேற்கு பகுதியில் உள்ளது. இங்குள்ள மக்கள் பொன்னேரிக்கு செல்ல வேண்டும் என்றால் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பழவேற்காடு சாலை வழியாக செல்ல வேண்டும் இந்த கிராமத்திற்கும் பொன்னேரிக்கு இடையே 300 மீட்டர் இடைவெளி தூரத்தில் ஆரணி ஆறு செல்கிறது. பொன்னேரியில் இருந்து குனனமஞ்சேரி செல்ல பொன்னேரியில் ஆரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து தமிழக அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்தது. தற்போது பாலப்பணிகள் முடிந்து விட்டன. இந்த நிலையில் ஆற்றங் கரையோரத்தில் சிலர் வீடுகள் கட்டி குடியிருந்து வருவதால் இந்த பகுதி மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதாக வருவாய்த்துறையினர் கூறி வந்தனர்.

மாற்று இடம் கிடைக்காத நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் அதிகாரிகள் உள்ளனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஆகியோர் திடீரென பொன்னேரியில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பாதுகாப்பு பெட்டகம்

இதனையடுத்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு 16 வகையான பொருட்கள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை குழந்தைகளின் பெற்றோர்களிடம் கலெக்டர் வழங்கினார். அப்போது சுகாதார நலப்பணி இணை இயக்குனர் தயாளன், பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி அலுவலர் அனுரத்னா, வருவாய் ஆர்.டி.ஓ. முத்துசாமி, தாசில்தார் கார்த்திகேயன், உள்பட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது.