மாவட்ட செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 2 வாலிபர்கள் பலி

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 2 வாலிபர்கள் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குன்னூர்,


சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் தயாளன். இவரது மகன் அரவிந்த்(வயது 21). துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த அரவிந்த், பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அவருடன், அவரது நண்பர்களான அஜித்(21), லோகநாதன்(22), ஆகாஷ்(22), சசிதரன்(21) ஆகியோரும் சென்றிருந்தனர். திருமண வரவேற்பு முடிந்ததும் அவர்கள் அங்கிருந்து ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று அதிகாலை 4 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் 5 பேரும் ஊட்டிக்கு புறப்பட்டனர். அதில் ஒரு மோட்டார் சைக்கிளை அரவிந்த் ஓட்டினார். அவருக்கு பின்னால் அஜித் அமர்ந்திருந்தார். ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து மதியம் 1.30 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டனர்.

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் அருகே வந்தபோது, திடீரென நிலைதடுமாறி அரவிந்த் ஓட்டிய மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. அதில் சாலையில் தவறி விழுந்து அரவிந்த், அஜித் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடனே மற்ற 2 மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த நண்பர்களும், அந்த வழியாக வந்த பிற வாகன ஓட்டிகளும் படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அரவிந்த், அஜித் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.