மாவட்ட செய்திகள்
அன்னவாசல் அருகே கிராம நிர்வாக அதிகாரி திராவகம் குடித்து தற்கொலை

அன்னவாசல் அருகே கிராம நிர்வாக அதிகாரி திராவகம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்,

புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் அருண்குமார்(வயது 30). இவர் அன்னவாசல் அருகே உள்ள பரம்பூரில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் தினமும் புதுக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பரம்பூருக்கு வேலைக்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் காலை அருண்குமார் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்காக பரம்பூருக்கு சென்றார்.

அப்போது அருண்குமார் புல்வயல் பகுதியில் உள்ள காட்டு பகுதிக்குள் சென்று திராவகம் குடித்து விட்டு, தனது நண்பர்களிடம் தான் திராவகம் குடித்து விட்டதாக செல்போனில் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருண்குமாரின் நண்பர்கள், அங்கு விரைந்து வந்து அவரை மீட்டு பெருமநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை யடுத்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அருண்குமார் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் பணிச் சுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப சூழ்நிலையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கிராம நிர்வாக அதிகாரி அருண்குமாருக்கு திருமணமாகி மீனாட்சி என்ற மனைவியும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.