மாவட்ட செய்திகள்
நாகர்கோவிலில் டிரைவர் கொலை: அக்காள், கள்ளக்காதலனுடன் சிக்கினார்

நாகர்கோவிலில் டிரைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவருடைய அக்காள் கள்ளக்காதலனுடன் சிக்கினார்.
நாகர்கோவில்,

நாகர்கோவில் பெருவிளையை சேர்ந்தவர் நீலசாமி என்ற நீலதங்கம் (வயது 45). டிரைவர். இவரை மர்ம கும்பல் கொன்று கோட்டவிளையில் உள்ள ஒரு கிணற்றில் வீசியது. இதுதொடர்பாக நீலசாமியின் அக்காள் அமராவதி உள்பட சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே அமராவதியின் வீட்டுக்கு வந்து நீலசாமியை அழைத்துச் சென்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நபர் அமராவதியின் கள்ளக்காதலன் என்பது தெரிய வந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியா யின. அதன் விவரம் வருமாறு;-

அதாவது அமராவதியும், அந்த நபரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வந்தனர். இதனை அறிந்த நீலசாமி தன்னுடைய அக்காளை கண்டித்தார். இதனால் அமராவதி தன்னுடைய கள்ளக்காதலனை சந்திக்க தடை ஏற்பட்டது. எனவே நீலசாமியை தீர்த்துக் கட்டினால்தான் நிம்மதியாக இருக்கலாம் என்று அமராவதி நினைத்தார். இதுபற்றி தன்னுடைய கள்ளக்காதலனிடம் கூறினார். இருவரும் நீலசாமியை தீர்த்துக் கட்ட திட்டமிட்டனர்.

திட்டத்தின்படி அமராவதியின் கள்ளக்காதலன், கோட்டவிளையில் உள்ள குடிநீர் கிணற்றுக்கு நீலசாமியை அழைத்துச் சென்றார். அங்கு நீலசாமியை மது குடிக்க வைத்துள்ளார். போதை மயக்கத்தில் இருந்த நீலசாமியின் கைகளை, அவர் உடுத்தியிருந்த லுங்கியால் கட்டி கிணற்றுக்குள் தள்ளியுள்ளார். இப்படித்தான் அவர்களது திட்டம் அரங்கேறி உள்ளது.

அமராவதி, அவருடைய கள்ளக்காதலனுடன் போலீசில் சிக்கி உள்ளதால் இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இன்னும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அமராவதியையும், அவருடைய கள்ளக்காதலனையும் கைது செய்ய தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் இன்று கைதாக வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.