மாவட்ட செய்திகள்
பிரச்சினைக்குரிய வலையை பயன்படுத்துவது எப்படி? - மீனவர்களுக்கு கலெக்டர் விளக்கம்

குமரி மாவட்டத்தில் பிரச்சினைக்குரிய வலையை எப்படி பயன்படுத்துவது என்று மீனவர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே விளக்கம் அளித்துள்ளார்.
நாகர்கோவில்,

வலையை எப்படி பயன்படுத்துவது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் காச்சா மூச்சா வலை எனப்படும் மூன்று அடுக்கினால் ஆன மோனோ/ பிலமென்ட் (தங்கூஸ்) நாரிழையினால் உருவாக்கப்பட்ட 90 மில்லி மீட்டருக்கு குறைவான கண்ணியளவு கொண்ட தாத்துவலை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வலையினை பயன்படுத்துவதால் ஏற்ப்படும் பிரச்சினைகளைதவிர்க்கும் பொருட்டு எனது (கலெக்டர்) தலைமையிலான குழுவின் பரிசீலனை முடிவு வெளியிடப்படும் வரை காச்சா மூச்சா வலை எனப்படும் பிரச்சினைக்குரிய வலைகளை குமரி மாவட்டத்தில் எப்பகுதியிலும் பயன்படுத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் 1983-ம் ஆண்டு சட்ட திருத்த விதிகளின்படி கலெக்டர் தலைமையிலான குழுஅமைக்கப்பட்டு குழுவின் பரிசீலனையின்படி நிபந்தனைகளுக்கு உட்பட்டு காச்சா மூச்சா வலை மற்றும் அக்கடி எனப்படும் கணவாய் மீன்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் சேகரிக்கும் சாதனம் ஆகியவற்றை பயன்படுத்திட குமரி மாவட்ட பாரம்பரிய மீனவர்களுக்கு அறிவிப்பு ஆணை வழங்கப்படுகிறது.

தூண்டில் மூலம் கணவாய் மீன்களை பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் கணவாய்களை சேகரிக்கும் சாதனம் தயார் செய்ய மட்கும் பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். தூண்டில் மூலம் கணவாய்களை பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் கணவாய் சேகரிக்கும் சாதனம் தயாரிப்புக்கு பிளாஸ்டிக் உபயோகிக்கக் கூடாது. கடற்கரையில் இருந்து 5 நாட்டிக்கல் மைலுக்கு உட்பட்ட பகுதியில் தூண்டில் மூலம் மட்டுமே கணவாய் மீன்பிடிப்பு மேற்கொள்ளப்படவேண்டும்.

தூண்டில் மூலம் கணவாய் பிடிக்கும் பாரம்பரிய மீனவர்கள் கணவாய் மடைகள் கண்டறிந்து அதில் கணவாய் சேகரிக்கும் சாதனத்தை இடுகின்றனர். இவ்வாறு பாரம்பரிய மீனவர்களால் கண்டறியப்பட்டு கணவாய் சேகரிக்கும் சாதனங்கள் இடப்பட்டுள்ள இடங்களில் காச்சா மூச்சா வலைகள் பயன்படுத்தக்கூடாது. காச்சா மூச்சா வலையை கடற்கரையிலிருந்து 5 நாட்டிக்கல் மைலுக்கு உட்பட்ட பகுதியில் பயன்படுத்தக்கூடாது.

கடற்கரையில் இருந்து 5 முதல் 10 நாட்டிக்கல் மைலுக்கு உட்பட்ட பகுதியில் காச்சா மூச்சா வலை மற்றும் தூண்டில் மூலம் கணவாய்கள் பிடித்தல் ஆகிய இரு மீன்பிடி முறைகளையும் மேற்கொள்ளலாம். இப்பகுதியில் கணவாய் பிடிப்பதில் ஈடுபடும் போது இரு சாராரும் ஒருவர் மற்றொருவருடைய மீன்பிடி சாதனத்துக்கு பாதிப்பு இல்லாமல் மீன்பிடிப்பு மேற்கொள்ளவேண்டும். காச்சா மூச்சா வலை 1000 மீட்டருக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

இந்த வலையின் உட்கன்னி அளவு 120 மி.மீ.-க்கு குறைவாக இருக்கக்கூடாது. அடிமட்ட வலைகளை பாரம்பரிய மீனவர்களால் 5 நாட்டிக்கலுக்கு உட்பட்ட பகுதியில் பயன்படுத்தப்படும் போது, அவை ஓரடுக்கு செவுள் வலைகளாகவும், கண்ணி அளவு 90 மீ.மீ.க்கு மேலும்் இருக்கவேண்டும். மேலும் இப்பொருள் குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திட சென்னை மீன்துறை இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.