மாவட்ட செய்திகள்
பிளாஸ்டிக் பையால் முகம் கட்டப்பட்ட நிலையில்படுக்கை அறையில் பிணமாக கிடந்த அரசு பெண் ஊழியர்

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பையால் முகம் கட்டப்பட்ட நிலையில் படுக்கை அறையில் அரசு பெண் ஊழியர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பையால் முகம் கட்டப்பட்ட நிலையில் படுக்கை அறையில் அரசு பெண் ஊழியர் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பெண் ஊழியர்

தூத்துக்குடி கோரம்பள்ளம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி தமிழ்செல்வி (வயது 49). இவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். செந்தில்குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமிழ்செல்வி தனது உறவினரின் மகனை வளர்த்து வந்தார். தற்போது அவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஹவுசிங் போர்டு வீட்டில் தமிழ்செல்வி மட்டும் தனியாக வசித்து வந்தார்.

படுக்கை அறையில் பிணம்

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தமிழ்செல்வியின் வீடு பூட்டியே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டின் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் திறக்கவில்லை. இதையடுத்து தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு உள்ள அறையில் படுக்கையில் மர்மமான முறையில் தமிழ்செல்வி இறந்து கிடந்தார். அவரின் முகம் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்டு கட்டப்பட்டு இருந்தது.

போலீசார் விசாரணை

இதனையடுத்து போலீசார் தமிழ்செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்செல்வியின் முகத்தில் பிளாஸ்டிக் பை சுற்றி இருந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பையால் முகம் கட்டப்பட்ட நிலையில் படுக்கை அறையில் அரசு பெண் ஊழியர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.