மாவட்ட செய்திகள்
மத வழிபாடு நடத்த அனுமதிக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை கிறிஸ்தவ அமைப்பினர் முற்றுகை

மத வழிபாடு நடத்த அனுமதிக்கக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை கிறிஸ்தவ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் முற்றுகையிட்டனர்.
ஈரோடு,ஈரோடு மாணிக்கம்பாளையம்ரோடு காந்திநகர் பகுதியில் மத வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. அங்கு அனுமதியின்றி மத வழிபாடு நடத்தப்படுவதாக இந்து முன்னணி அமைப்பினர் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும், நேற்று முன்தினம் அங்கு திரண்ட இந்து முன்னணியினர் மத வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்னர் மத வழிபாடு நடத்தப்பட்ட கட்டிடம் மூடப்பட்டது.இந்தநிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக கிறிஸ்தவ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நின்றுகொண்டு திடீரென முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், பொருளாளர் விஜயபாலன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், பொறுப்பாளர் விஸ்வநாதன் உள்பட பலர் திரண்டு நின்று, காந்திநகரில் மதவழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.போலீசார் கூறுகையில், ‘‘உங்களுடைய கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்’’, என்று கேட்டுக்கொண்டனர். அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து, கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு கிறிஸ்தவ வாலிபர்கள் முன்னேற்ற இயக்க பொதுச்செயலாளர் ஜோசுவா ஸ்டீபன் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–ஈரோடு மாணிக்கம்பாளையம்ரோட்டில் உள்ள காலி இடத்தில் கட்டிடத்தை கட்டி இறைப்பணி, சமுதாயப்பணி மற்றும் டியூசன் சென்டர் நடத்தப்பட்டு வருகிறது. சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் எந்த ஒரு செயலும் நடக்கவில்லை. இந்தநிலையில் சிலர் மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகிறார்கள். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பூட்டப்பட்ட கட்டிடத்தை திறந்து மத வழிபாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.