புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலை வழக்கு: பொன்னேரி கோர்ட்டில் 4 பேர் சரண்
புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் பொன்னேரி கோர்ட்டில் 4 பேர் சரண் அடைந்தனர்.;
வண்டலூர்,
வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 43). புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட அமைப்பாளராக இருந்தார்.
கடந்த மாதம் 17–ந்தேதி முருகன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஒரு கார் மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த அவரை காரில் வந்த ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இச்சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் போகிகிருஷ்ணன் (48), அவரின் மகன் சுபாஷ் (24), கவாஸ்கர் (36), மணிகண்டன் (28), அஜீத் (25), செல்வகுமார் (27) ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் முருகன் கொலை வழக்கில் நேற்று பொன்னேரி ஜெ.எம்–2 குற்றவியல் நடுவர் கோர்ட்டில் இரும்புலியூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (28), யானைக்கவுனியை சேர்ந்த சுதாகர் (26), வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் (27), கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஸ்டாலின் (32) ஆகியோர் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.