திருமங்கலம் அருகே விமான நிலைய சாலையில் குழாய் உடைந்து ஒரு வாரமாக வீணாக வெளியேறும் குடிநீர்
திருமங்கலம் அருகே விமானநிலைய சாலையில் கூட்டு குடிநீர் குழாய் உடைந்தததால், ஒரு வாரமாக தண்ணீர் வீணாக வெளியேறி குளம் போல் தேங்கி நிற்கிறது.;
திருமங்கலம்,
திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு வைகை கூட்டு குடிநீர் திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மழை சரி வர பெய்யாததாலும், பருவ மழை பொய்த்ததாலும், தமிழகமெங்கும் கடும் வறட்சி நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால், ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும் அதிலிருந்து தண்ணீர் பெறுவது கேள்வி குறியாகி வருகிறது.
இதனால் வைகை, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்களில் இருந்து வழங்கப்படும் குடிநீர், தற்போது குறைந்த அளவே கிடைத்து வருகிறது. மேலும் தொலை தூரங்களில் இருந்து இந்த திட்டத்திற்காக போடப்பட்ட, மெயின் குழாய்கள் உடைந்து போவதால், தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. அந்த தண்ணீரை சிலர் குட்டை போல தேக்கி வைக்கின்றனர். மற்றும் சிலரோ தங்களது நிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
இந்தநிலையில் திருமங்கலத்தில் இருந்து விமானநிலையம் செல்லும் சாலையில் சுங்குராம்பட்டி அருகே உள்ள கல்லூரி பஸ்ஸ்டாப்பில் கூட்டு குடிநீர் மெயின்குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி குளம் போல் தேங்கி நிற்கிறது. கடந்த ஒருவாரமாக இதே நிலை நீடிப்பதால், அந்த பகுதியில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்பதாக அந்த பகுதி பொது மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
மேலும் தற்போது கடும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மெயின் குழாய்கள் செல்லும் வழியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவது வேதனையளிப்பதாகவும் அவர்கள் கூறினர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த ஒருவாரமாக இந்த மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்த நிலையில் தண்ணீர் வீணாகி வெளியேறி வருவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியவில்லையா? என்றும் அந்த பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே குழாய் உடைப்பை உடனடியாக குடிநீர் வடிகால் வாரியம் சரி செய்து தர வேண்டும் என்று சுங்குராம்பட்டி, விடத்தகுளம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.