இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதற்கு நண்பர்களே காரணம்
இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதற்கு நண்பர்களே காரணம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பேசினார்.;
வேலூர்,
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் வேலூரில் நேற்று பொதுமக்கள், மாணவ– மாணவிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் புகழேந்தி வரவேற்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் கருத்தரங்கின் நோக்கம் பற்றி பேசினார்.
நிகழ்ச்சியில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாவது குறித்து குறும்படங்கள் மூலம் விளக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
தனிப்பட்டமுறையில் யாரும் போதைக்கு அடிமையாவதில்லை, நண்பர்கள் மூலமாகத்தான் போதைக்கு அடிமையாகிறோம். எனவே, இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதற்கு நண்பர்களே காரணம். இதனால் அவர்கள்தான் முதல் எதிரி. பள்ளி, கல்லூரி நண்பர்களில் சிலர் போதை பழக்கத்திற்கு ஆளாகியிருப்பார்கள். அவர்கள் சுயலாபத்திற்காக நம்மையும் போதை பழக்கத்திற்கு இழுப்பார்கள். எனவே நாமாக போதைக்கு அடிமையாவதில்லை.
தற்போது பிறந்த நாள், திருமண நாள் என மதுவிருந்துவைக்கிறார்கள். நாம் அதை போதையாக நினைக்காமல் விருந்தாக நினைத்து கலந்துகொள்கிறோம். அதுவே நாளடைவில் நம்மை போதைக்கு அடிமையாக்கிவிடுகிறது. பின்னர் நம்மால் போதை பொருள் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. எனவே போதைக்கு அடிமையாவதற்கு 99 சதவீதம் நண்பர்களே காரணம்.
நாளடைவில் நம்முடைய மூளைசெயல்பாட்டை போதையே கட்டுப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். அதில் இருந்து மீண்டுவருவது கடினம். அப்படி மீண்டு வந்தால் அது மிகப்பெரிய சாதனை. நீங்கள் வருங்கால சமுதாயத்தின் தூண்கள். நீங்கள் போதை பொருளுக்கு அடிமையாகாமல் இருந்தால்தான் உன்னதமான தேசத்தை உருவாக்க முடியும்.
போதைக்கு அடிமையானால் இந்த சமுதாயம் நம்மை மதிக்காது. பெண்கள்கூட போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். எனவே நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். யாரும் நம்மை அழைத்தால் அதை தவிர்க்கவேண்டும். நமக்கென்று ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நமக்கு அந்த பழக்கம் இருந்தால் மற்றவர்களை கெடுக்கக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் கட்டுப்பாட்டை மீறிசெல்லக்கூடாது. அதற்கு நீங்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டவர்கள் கலந்துகொண்டு போதைக்கு அடிமையானதால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து விளக்கினர். இதில் இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், ரஜினிகாந்த், பாண்டி, மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் வந்திருந்தனர். தங்கள் பகுதியில் சிலர் கஞ்சாவிற்பதாகவும், அவர்களை போலீசார் கைது செய்வதில்லை என்றும் தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் அவர்களை சமாதானம் செய்தார். அதன் பின்னர் கருத்தரங்கம் முடிந்ததும் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனிடம் மனுகொடுத்துவிட்டு சென்றனர்.