அரக்கோணம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

அரக்கோணம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2017-07-01 03:30 IST

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே கும்பினிபேட்டை பஸ் நிறுத்தம் எதிரே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் பொதுமக்கள் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்று உள்ளனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–

கும்பினிபேட்டை பகுதியில் இரவு 11 மணி வரை கடைகள் திறந்து இருக்கும். நேற்று முன்தினம் கடைகள் மூடிய பின்னர் தான் மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி செய்து உள்ளனர்.

எந்திரத்தை உடைக்க முடியாததால் அப்படியே போட்டுவிட்டு சென்று உள்ளனர். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்படாததால் பணம் எதுவும் கொள்ளை போய் இருக்க வாய்ப்பு இல்லை. ஏ.டி.எம். எந்திரத்தை பராமரிக்கும் அதிகாரிகள் வந்து பார்த்த பின்னர் தான் பணம் பற்றி தகவல் தெரியும்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்