உறவினர்கள் போல் நடித்து பெண்ணை ஏமாற்றி ரூ.19 லட்சம் திருட்டு

உறவினர்கள் போல் நடித்து பெண்ணை ஏமாற்றி நூதன முறையில் ரூ.19 லட்சத்தை திருடிச்சென்ற 2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2017-07-02 03:30 IST

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் மூலசத்திரம் நாகூர்மீரான் தோட்டம் 1–வது தெருவைச் சேர்ந்தவர் சிவராமன் (வயது 39). இவர், சென்னை துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு கவுதம்(5) என்ற மகனும், யாழினி(1½) என்ற மகளும் உள்ளனர். சிவராமனின் தங்கை உஷாவும் இவர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.

சிவராமனுடன் பிறந்தவர்கள் 3 பேர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள இவர்களுக்கு சொந்தமான நிலத்தை ரூ.1 கோடியே 35 லட்சத்துக்கு விற்றனர். அதில் தங்கள் குடும்ப கடன்கள், இதர செலவுகள் போக மீதி ரூ.19 லட்சம் பணத்தை பின்னர் பிரித்து கொள்ளலாம் என்று கூறி சிவராமனிடம் கொடுத்து வைத்து இருந்தனர். அவர் தனது வீட்டின் பீரோவில் அந்த பணத்தை வைத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவராமனின் மனைவி கிருஷ்ணவேணியின் செல்போனில் மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். ‘‘நாங்கள் சிவராமனுக்கு உறவினர்கள். அவரை பார்க்க வந்தோம். வீட்டு முகவரி தெரியாமல் நிற்பதாக’’ தெரிவித்தார்.

கணவரின் உறவினர் என்று கூறியதால் கிருஷ்ணவேணியும் தனது வீட்டுக்கு வழி சொன்னார். பின்னர் கிருஷ்ணவேணி வீட்டுக்கு வந்த அந்த நபர், என்னுடன் வந்தவர் தெரு முனையில் நிற்கிறார். அவரை அழைத்து வரும்படி கிருஷ்ணவேணியிடம் கூறினார்.

அவரும் தெருமுனைக்கு சென்று அங்கு நின்ற மற்றொருவரை அழைத்து வந்தார். அதற்குள் வீட்டில் இருந்த மர்மநபர், பீரோவில் இருந்த ரூ.19 லட்சம் பணத்தை திருடி மறைத்து வைத்துக் கொண்டார். பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு சிவராமன் வந்தால் கூறும்படி திரும்பிச் சென்று விட்டனர்.

வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு வந்த சிவராமன், பீரோவில் இருந்த ரூ.19 லட்சம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான் உறவினர்கள் போல் வீட்டுக்கு வந்த மர்மநபர்கள், கிருஷ்ணவேணியை ஏமாற்றி நூதன முறையில் பணத்தை திருடிச்சென்று விட்டது தெரிந்தது.

இந்த நூதன திருட்டு குறித்து மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணவேணியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபரின் செல்போன் எண்ணை வைத்து மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்