தி.மு.க.வை பலப்படுத்த இளைஞர் அணியினர், தொண்டர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்

தி.மு.க.வை பலப்படுத்த இளைஞர் அணியினர், தொண்டர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.;

Update:2017-07-02 04:00 IST
புதுச்சேரி,

புதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நெல்லித்தோப்பு கீர்த்தி மகாலில் நேற்று நடந்தது. இதன் தொடக்க விழாவில் மாநில இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ் வரவேற்று பேசினார். தி.மு.க. இளைஞரணி இணை செயலாளர் சுபா.சந்திரசேகர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். தி.மு.க. (தெற்கு) மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது;–
காங்கிரசார் ரகசிய உறவு

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சிக்கு முழுமையான ஆதரவை கொடுங்கள் என்று நமக்கு கட்டளையிட்டுள்ளார். ஸ்டாலின் கட்டளையை நாம் மீறுவதே கிடையாது. ஆனால் காங்கிரசார் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடனும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடனும் ரகசிய உறவு வைத்திருக்கின்றனர். அவர்களை முன்னிறுத்தி சில பணிகளை செய்கின்றனர்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு ஒன்றை தெரிவித்துக் கொள்கிறோம். தி.மு.க.வினர் யாரும் மு.க.ஸ்டாலினின் கட்டளையை ஒருபோதும் மீற மோட்டோம். எங்களை சந்தேக கண்ணோடு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
முனைப்புடன் செயல்பட வேண்டும்

நமது கட்சியை மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக பலப்படுத்த வேண்டும். நாம் தனித்து தேர்தலில் போட்டியிட தயாரானால் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நமக்கு அனுமதி வழங்குவார். ஏற்கனவே அவர் நம்மிடம் பேசும் போது தனித்து போட்டியிட தயாரா? என்று தான் கேட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப ஓட்டுகளில் 3,4 தொகுதிகளை இழந்தோம். நாம் போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியினரே சுயேட்சையாக நின்றதும் ஒரு காரணம்.

காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் நமக்கும் இதே பிரச்சினை வந்தது. ஆனால் நாம் நம் கட்சியினரை சந்தித்து பேசி அவர்கள் போட்டியிடுவதை தவிர்த்தோம். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் அப்படி செய்யவில்லை. இதனால் தான் சில தொகுதிகளை இழக்க நேர்ந்தது. கட்சியை பலப்படுத்த தி.மு.க. இளைஞர் அணியினர். தொண்டர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
மவுனம் காக்க கூடாது

புதுவை கவர்னர் தனக்குத்தான் அதிகாரம் என கூறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க தேர்வு செய்து மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளார். அப்படியென்றால் வெளிப்படையாக கவர்னர் அரசியல் செய்கிறார். அவர் கவர்னர் பதவிக்கான தகுதியை இழந்து விட்டார்.

கவர்னரின் செயல்பாடுகளை எதிர்க்காமல் காங்கிரஸ் கட்சியினர் மவுனம் காத்து வருகின்றனர். இது மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கவர்னரால் தான் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்று நீண்ட நாள் ஓட்ட முடியாது. எனவே இனியும் காங்கிரஸ் கட்சியினர் மவுனம் காக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, மூர்த்தி, மாநில துணை அமைப்பாளர் அமுதாகுமார், பொருளாளர் குமரவேல், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்