15 ரெயில் நிலையங்களில் பணமில்லா பரிவர்த்தனை வசதி
மத்திய ரெயில்வேக்கு உள்பட்ட 15 ரெயில் நிலையங்களில் பணமில்லா பரிவர்த்தனைக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.;
மும்பை,
மத்திய ரெயில்வேக்கு உள்பட்ட 15 ரெயில் நிலையங்களில் பணமில்லா பரிவர்த்தனைக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், காகித பணத்தின் தேவையை குறைக்கவும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. குறிப்பாக அனைத்து அரசு துறைகளிலும் இதற்கான வசதிகளை அதிகரிக்கவும் முயற்சித்து வருகிறது.இந்த நிலையில் மத்திய ரெயில்வேயின் 15 ரெயில் நிலையங்களில் 100 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனைக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அவை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், லோக்மான்ய திலக் டெர்மினஸ், தானே, புனே, மிராஜ், ஸ்ரீ சத்ரபதி சாகு மகாராஜ் டெர்மினஸ், சோலாப்பூர், கோபர்காவ், சாய்நகர் ஷீரடி, புசாவல், அமராவதி, நாசிக் ரோடு, பல்லர்ஷா மற்றும் வார்தா ஆகிய ரெயில் நிலையங்கள் ஆகும்.இந்த ரெயில் நிலையங்களில் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், லகேஜ், பார்சல் உள்பட அனைத்து வசதிகளையும் பணமில்லா பரிவர்த்தனையின் மூலமாகவே பெறமுடியும். இதற்காக ‘பாயிண்ட் அப் சேல்’ எந்திரங்கள் இந்த ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
தற்போது 15 ரெயில் நிலையங்களில் மட்டும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் கூடிய விரையில் மத்திய ரெயில்வேயின் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.