எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார், திருவனந்தபுரம் சென்றார்
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மீராகுமார், சென்னையில் தி.மு.க.–காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு கோரினார்.;
ஆலந்தூர்,
பின்னர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். அதன்பிறகு புதுச்சேரியில் உள்ள தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு கேட்டார்.
இதையடுத்து மீராகுமார், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஜனாதிபதி தேர்தலுக்காக சென்னை வந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு கேட்டேன். அப்போது ஸ்டாலின் உடன் இருந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்தித்து ஆதரவு கோரினேன். புதுச்சேரி சென்று முதல்–அமைச்சர் மற்றும் தி.மு.க.–காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு கேட்டேன். அவர்களும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
தற்போது திருவனந்தபுரத்துக்கு செல்கிறேன். தமிழகத்துக்கு வந்தது பெருமையாக இருக்கிறது. தமிழக மக்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.