தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படும் சென்னை மாநகராட்சி பள்ளி

சென்னை கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி பள்ளி ‘ஸ்மார்ட்’ வகுப்பறை, ‘பயோ மெட்ரிக்’ வருகைப்பதிவு போன்றவற்றுடன் தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.;

Update:2017-07-03 04:15 IST
சென்னை,

தனியார் பள்ளிகள் மீதான மோகம் பெற்றோர் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு அரசு உள்ளது. ஆனால், அதற்கான முன்னேற்பாடுகள் மிக தாமதமாகவே மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாகவே பல அரசு பள்ளிகளில் குறைந்த அளவில் மாணவர்கள் படித்து வரும் நிலை இருக்கிறது. சில அரசு பள்ளிகளை மூட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘எல்லாவற்றுக்கும் அரசையே நம்பி இருக்க முடியாது. நாமே நமது பள்ளியின் தரத்தை உயர்த்தலாம்’ என்ற முடிவை எடுத்து சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொடுங்கையூரில் செயல்பட்டு வரும் சென்னை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் செயல்பட தொடங்கினர்.

நவீன வசதி

இதன் விளைவு இந்த பள்ளி ஏ.சி. சாதனத்துடன் கூடிய ‘ஸ்மார்ட்’ வகுப்பறை, ‘பயோ மெட்ரிக்’ வருகைப்பதிவு, கண்காணிப்பு கேமரா போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தொடர்ந்து 5-வது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்காக இந்த பள்ளி வளர்ச்சிக்காக அரசு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கி உள்ளது. இந்த தொகையின் மூலம் பள்ளியில் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் சில மாதங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று சென்ற இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, தற்போதைய பொறுப்பு தலைமை ஆசிரியர் சுபாஷ் சந்திரன், ஆசிரியர் இளமாறன் உள்ளிட்ட ஆசிரியர்கள் குழு ஒருங்கிணைத்து செயல்படுத்தி உள்ளது.

மாணவர்களின் வருகை பதிவு

பள்ளிகளில் பொதுவாக ‘பயோ மெட்ரிக்’ வருகைப்பதிவு ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்கவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கொடுங்கையூர் அரசு பள்ளியில் மாணவர்களின் வருகையும் பதிவு செய்யப்படுகிறது. 6-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து வரும் மாணவ-மாணவிகள் 263 பேர் ‘பயோ மெட்ரிக்’ வருகை பதிவு எந்திரம் மூலமே தங்களது வருகையை பதிவு செய்கின்றனர்.

அடுத்தகட்டமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வரும் 200 மாணவ-மாணவிகளும் ‘பயோ மெட்ரிக்’ முறையை பயன்படுத்த ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாணவ-மாணவிகள் காரணம் தெரிவிக்காமல் பள்ளிக்கு வராமல் இருந்தால் அவர்களது பெற்றோரை ஆசிரியர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு விவரத்தை பதிவு செய்கின்றனர்.

கண்காணிப்பு கேமரா

இந்த பள்ளியில் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் தலைமை ஆசிரியரின் அறையில் உள்ள கணினியில் இணைக்கப்பட்டுள்ளது. தனது அறையில் இருந்து கணினியை கவனித்தபடியே தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மைக் மூலம் அறிவுரை வழங்கி வருகிறார். இதற்காக ஒவ்வொரு வகுப்பறையின் உள்ளேயும், வெளிப்பகுதியிலும் ‘ஸ்பீக்கர்’ பொருத்தப்பட்டுள்ளது.

பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்யும் தனியார் பள்ளிகளில் கூட ‘ஸ்மார்ட்’ வகுப்பறை வசதி இல்லாதபோது கொடுங்கையூர் அரசு பள்ளியில் ஏ.சி. வசதியுடன் ‘ஸ்மார்ட்’ வகுப்பறை ஏற்படுத்தி இருப்பது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கு சுழற்சி அடிப்படையில் அனைத்து வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கும் ‘ஸ்மார்ட்’ வகுப்பறையில் பாடம் நடத்தப்படுகிறது. இந்த பள்ளியில் மாடித்தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் காய்கறிகளை சத்துணவுக்காக பயன்படுத்தி கொள்கின்றனர்.

கூடுதல் கட்டிடம்

உணவு இடைவேளையின் போது நடப்பு செய்திகளை அறிந்து கொள்ள டி.வி. மூலம் செய்தி சேனல்கள் ஒளிபரப்பப்படுகிறது. ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் தங்களது பிறந்த நாளின் போது மரக்கன்றுகள் கொண்டு வர வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி இங்கு ஏராளமான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இத்தனை வசதிகளையும் கொண்டுள்ள இந்த பள்ளியில் ஆர்வத்துடன் குழந்தைகளை பெற்றோர் சேர்த்து வருவதால் இடநெருக்கடி மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. விசாலமான வகுப்பறைகள் இல்லாத காரணத்தினால் சில வகுப்பறைகளில் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. உடனடியாக இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என ஆசிரியர், பெற்றோர் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்