குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய விவசாயி மின் கம்பியை பிடித்து தற்கொலை
எழுமலை அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிய விவசாயி, மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியை அடுத்த எழுமலை அருகே உள்ளது ஜோதில்நாயக்கனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் வெள்ளமுத்து மகன் ராமர் (வயது35). விவசாய வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி பஞ்சு (30). இவரும் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கிடையை அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
நேற்று காலை இருவரும் தோட்டத்து வேலைக்கு சென்றனர். அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது வழக்கம் போல் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த ராமர், தான் வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். அதில் படுகாயமடைந்த பஞ்சு ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த ராமர் மனைவியை வெட்டி விட்டோமே என்று மன வேதனை அடைந்தார்.
மேலும் தான் அரிவாளால் வெட்டியதில் மனைவி இறந்துவிட்டார் என நினைத்து பயந்து போன ராமர், தோட்டத்தில் உள்ள மோட்டார் அறைக்கு சென்று, அங்கிருந்த மின்கம்பியை பிடித்தார். அதில் மின்சாரம் தாக்கியதால் ராமர் சம்பவ இடத்திலேயே பலியானார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த பஞ்சு, ரத்தகாயங்களுடன் ஊருக்குள் சென்று உறவினர்களிடம் கூறினார்.
இதையடுத்து உறவினர்கள், கிராமத்தினர் தோட்டத்திற்கு வந்து பார்த்த போது, அங்குள்ள மோட்டார் அறையில் ராமர் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவறிந்து வந்த உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி, காயமடைந்த பஞ்சுவை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ராமரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.