மழைநீர் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவு நீரை விடும் மாநகராட்சி
மழைநீர் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவு நீரை மாநகராட்சி விடுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சுத்தப்படுத்த வேண்டியவர்களே அசுத்தம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.;
மதுரை,
மதுரை புதூர் ராம்வர்மா நகர், சங்கர் நகர், முத்துராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளை இணைத்து செல்லும் மழைநீர் வாய்க்கால் ஒன்று வண்டியூர் கண்மாயை சென்றடைகிறது. இந்த நிலையில் இந்த வாய்க்காலில், மாநகராட்சி தற்போது பாதாள சாக்கடை கழிவு நீரை விடும் பணியில் இறங்கி உள்ளது.
அதாவது அந்த பகுதிகளில் சேரும் பாதாள சாக்கடை கழிவு நீர், சங்கர் நகரில் உள்ள பம்பிங் ஸ்டேசன் கொண்டு செல்லப்பட வேண்டும். அங்கிருந்து பம்பிங் மூலம் சக்கிமங்கலம் செல்கிறது. ஆனால் அந்த பம்பிங் ஸ்டேசனில் அதிக அளவு கழிவு நீரை பம்பிங் செய்ய முடியவில்லை. எனவே மாநகராட்சி, அந்த பம்பிங் ஸ்டேசனுக்கு செல்லும் குழாயை, அங்குள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலில் இணைத்து உள்ளது.
பம்பிங் ஸ்டேசனில், கழிவு நீர் நிரம்பும் போது அதனை மழைநீர் வாய்க்காலில் திறந்து விட்டுவிடுவதால், சில சமயங்களில் மழைநீர் வாய்க்காலில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி, அங்குள்ள மக்கள் வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலை உண்டாகுகிறது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலதடவை முறையிட்டும் பயன் இல்லை.
இது குறித்து சிலர் கூறியதாவது:–
சுத்தம், சுகாதாரம் என்று பிரசாரம் செய்யும் மாநகராட்சி, எங்கள் பகுதியில் அசுத்தம் செய்வது ஏன் என்று தெரியவில்லை. சுத்தப்படுத்த வேண்டியவர்களே அசுத்தம் செய்கிறார்கள். பாதாள சாக்கடை கழிவு நீரை, மழை நீர் வாய்க்காலில் விடும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் மாநகராட்சி, சுத்தம் குறித்து பிரசாரம் செய்யலாமா?.
சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக வரும் இந்த கழிவு நீரால் எங்கள் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி உடனடியாக இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். மழை நீர் வாய்க்காலில் கழிவு நீர் விடுவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.