திங்களூர் உள்பட 3 ஊராட்சிகளில் உள்ள குட்டைகளில் விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள அனுமதி

திங்களூர் உள்பட 3 ஊராட்சிகளில் உள்ள குட்டைகளில் விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள அனுமதி;

Update:2017-07-03 03:45 IST

பெருந்துறை,

குளம், குட்டைகளில் வண்டல் மண் அள்ள தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி பெருந்துறை ஒன்றியம் திங்களூர், பாப்பம்பாளையம், வெட்டயன்கிணறு ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரியிடம் மனு கொடுத்திருந்தனர். ஆனால் அனுமதி அளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வெட்டயன்கிணறு ஊராட்சிக்கு உள்பட்ட கரிச்சிபாளையம் கிராமத்தில் உள்ள நந்தவனகுட்டைக்கு நேற்று முன்தினம் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டர்களில் வண்டல் மண் அள்ளிக்கொண்டு இருந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று விவசாயிகளிடம், அனுமதியின்றி வண்டல் மண் அள்ளுவதாக கூறி தடுத்து நிறுத்தினார்கள். இதனால் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் விவசாயிகளிடம், ‘விரைவில் மண் அள்ள அனுமதி வழங்கப்படும்’ என்று அறிவித்தனர். இதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் திங்களூர், பாப்பம்பாளையம், வெட்டயன்கிணறு ஆகிய ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு குட்டையில் வண்டல் மண் அள்ளுவதற்கான அனுமதி அளித்தது. இதற்கான அனுமதி கடிதத்தை பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன் நேற்று காலை 8.30 மணிக்கு அந்த ஊராட்சிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளிடம் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து விவசாயிகள் பாப்பம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பாப்பம்பாளையம் பெரியவகைக்காடு குட்டைக்கு சென்று டிராக்டர்களில் மண் அள்ளிச்சென்றனர்.

மேலும் செய்திகள்